வாலாஜாபேட்டையில் முன்விரோதம் காரணமாக நெசவு தொழிலாளியை சுத்தியால் அடித்து கொலை செய்ய முயற்சித்ததாக அண்ணன், தம்பி இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபேட்டை ராயாஜி குளக்கரை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவரது மனைவி குமாரி (33). சீனிவாசன் நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்திற்கும் அணைக்கட்டு ரோடு புதுத்தெருவை சேர்ந்த ஓட்டலில் வேலை செய்து வரும் பிரபாகரன் (47), அவரது தம்பி கிருஷ்ணன் (36) ஆகியோர் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சீனிவாசனை பிரபாகரன், கிருஷ்ணன் ஆகியோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று தகராறு செய்துள்ளனர் . இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரபாகரன், கிருஷ்ணன் ஆகியோர் சீனிவாசனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் சுத்தியால் சீனிவாசன் தலையில் அடித்ததில் அவரது மண்டை இரண்டாக பிளந்தது. படுகாயம் அடைந்த சீனிவாசன் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக வாலாஜாபேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பிரபாகரன், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.