ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் அமீது, தான் பயின்ற நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். இவருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அப்துல் அமீது, "பள்ளி படிப்பை நன்றாக படிக்க வேண்டும். ஒரு துறையை தேர்வு செய்து அதில் சிறந்து விளங்க அனைவரும் முன்வரவேண்டும். படித்து உயர்ந்து நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்" என்று கூறினார்.
மேலும், அவர் தனது பள்ளி அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். "நான் பள்ளியில் படிக்கும்போது, இயற்பியல், வேதியியல், கணிதத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தைத் தூண்டி வளர்த்தது என் பள்ளி ஆசிரியர்கள் தான். அவர்களின் உதவியால் தான் இன்று இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன்" என்று கூறினார்.
விழாவில், அப்துல் அமீதுவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.