கருவறையில் இருக்கும்போதே, நாரத முனிவர் சொல்ல இறைவனின் நாமத்தைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர் பிரகலாதன். அதன் காரணமாக அசுர குலத்தில் அவதரித்திருந்த அவர், இறைவனின் சிந்தனையில் இருந்து மக்களுக்கு நல்லாட்சி புரிந்தார். எப்போதும் இறை சிந்தனையிலேயே இருந்த காரணத்தால், தந்தையே அவரைக் கொல்ல பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது. சிறுபிள்ளையாக இருந்த பிரகலாதனை, அவரது தந்தை இரண்யகசிபு, முறையான கல்வியைக் கற்பதற்காக குருகுலத்திற்கு அனுப்பிவைத்தான். அங்கு சென்று கல்வி அறிவோடு. ஆன்மிக அறிவையும் வளர்த்து வந்தார், பிரகலாதன். 

கல்வியை முடித்து வந்திருந்த பிரகலாதனிடம், “நீ படித்ததிலேயே உத்தமமான விஷயம் எது?” என்று இரண்யகசிபு கேட்டான். அப்போது தந்தையின் மடியில் அமர்ந்தபடியே, 9 விதமான பக்தியைப் பற்றிக் கூறினார், பிரகலாதன். அவர் சொன்ன 9 விதமான பக்தியைப் பற்றி இங்கே பார்ப்போம்.


1.சிரவணம்:-

இறைவனின் பெருமைகளைக் காதால் இடைவிடாமல் கேட்பது 'சிரவணம்' என்னும் பக்தி முறை யாகும். சொற்பொழிவு போன்ற விஷயங்கள் இதில் அடங் கும். பெரும் சாபத்திற்கு உள்ளாகியிருந்த அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மன்னன், தன்னுடைய இறுதிக் காலத் தில் சுகபிரம்ம மகரிஷி கூறிய பாகவதத்தைக் கேட்டு, மனம் அமைதியுற்றான்.

2. கீர்த்தனம்:- 

நம் வாயால் இடைவிடாமல் இறை வனின் புகழைப் பாடுவதையே, 'கீர்த்தனம்' என்கிறோம். இது பாடலால் இறைவனை அடையும் பக்தி முறை. சடகோபர் பாடிய பாடல்களால் சுகம் அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். சுகப்பிரம்ம மகரிஷியும் கூட, தன் கீர்த்தனங்களால் இறைவனைப் புகழ்ந்தவர்.

3. ஸ்மரணம்:- 

நாவால் சத்தமாக இறை வனின் நாமத்தை உச்சரிப்பது, 'ஸ்மரணம்’ என்னும் பக்தி வழிபாடாகும். இதனை தன் வாழ்நாளில் சிறப் பாகச் செய்து, இறைவனின் அருளைப் பெற்றவர், பிரகலாதன். தன்னுடைய தந்தை இரண்யகசிபு, அசுர குலத்தின் வேந்தனாக இருந்தபோதிலும், அவரைக் கண்டு பயம்கொள்ளாமல், ஹரி, நாரா யணா போன்ற நாமங்களை எப்போதும் சத்தமாக உச்சரித்தவர்.

4.பாதசேவை:- 

எத்தனை துன்பங்கள் வந்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் குறையாத பக்தியோடு இறைவனின் பாதங்களுக்குச் செய் யும் சேவையே, 'பாதசேவை' என்னும் பக்தி முறை. இந்த மகத்தான இறை வழிபாட்டை முறையாக, எப்போதும் செய்யும் பெரும் பேறுப் பெற்றவர், லட்சுமிதேவி. இவர் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்து, அவரின் பாதங்களை பிடித்துவிடும் பணி யில் எப்போதும் ஈடுபட்டிருப்பவர்.

5. அர்ச்சனை:- 

மனதில் எந்த களங்கமும் இல்லாமல், மலர்களைக் கொண்டு இறைவனுக்கு செய்யப்படும் பூஜையே ‘அர்ச்சனை' என்னும் பக்தி முறை. இறைவனுக்கு அர்ச்சனை செய்து அதன் வாயிலாக பெரும் பேறுபெற்றவர்களில், துருவன் வம்சத்தில் வந்த பிருது மகாராஜா முக்கியமானவர். அவரைப் போல அர்ச்சனை செய்தவர்கள் வேறு யாரும் இல்லை என்கிறது புராணங்கள்.

6. வந்தனம்:- 

எட்டு அங்கங்களும் நன்றாக நிலத்தில் படும்படி, இறைவனை வணங்குவது 'வந்தனம்' ஆகும். மகா விஷ்ணு, கண்ணனாக அவதரித்திருந்த காலகட்டத்தில், கம்சனின் அரசவை அமைச்சராக இருந்தவர் அக்ரூரர். இவர் கண்ணனுக்கு சித்தப்பா முறை. கம்சனின் மறைவுக் குப் பின், கண்ணனின் ஆலோசகராக இருந்தவர். இவர் கண்ணனை வந்தனம் செய்து சிறப்பு பெற்றவர்.

7.தாஸ்யம்:- 

இறைவனுக்கு பணியாளனாக இருந்து நேசத்துடன் தொண்டு செய்வது 'தாஸ்யம்' என்னும் பக்தி முறை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற ரீதியில் இறைவன் மீது பக்தி செலுத்தும் சிறப்பான வழிபாட்டுமுறை இது. இந்த வழிபாட்டில் அனுமனை விட சிறப்பானவர்கள் எவரும் இல்லை. அவர் ராமரின் தாசர் என்றே பெயர் பெற்றவர்.

8. சக்யம்:- 

இறைவனை தன்னுடைய பக்தனாக நினைத்து அவருடன் நட்பு கொள்வது ‘சக்யம்' என்னும் பக்தி முறை. தன்னுடன் இருப்பது இறைவன் என்று அறிந் திருந்தாலும், அவரைத் தன்னுடைய நண்பனாக பாவித்து, அனைத்து நல்லது கெட்டதுகளையும் பக்தி கொண்டு பாசம் காட்டும் ஒரு வழிபாட்டு முறை. இதனை தன் வாழ் நாள் முழுவதும் செய்தவன், அர்ச்சுனன். அவன் கிருஷ்ண ரின் மீது கொண்டிருந்த நட்புக்கு எல்லையே இல்லை.

9. ஆத்மநிவேதனம்:- 

தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் எந்தவித தயக்கமும் இன்றி, இறைவனுக்கு அர்ப்பணிப்பதே ‘ஆத்மநிவேதனம்' என்னும் பக்தி முறை. இதனை 'சரணாகதி' வழிபாடு என்றும் கூட சொல்லலாம். வாமனனாக தன் முன் நின்றிருந்த இறைவனுக்கு, தன்னி டம் இருந்த அனைத்தையும், தன்னையும் சேர்த்து அளித்து அழியாப் புகழ் பெற்ற மகாபலி சக்கரவர்த்தியை, இந்த பக்திக்கு உதாரணமாக்கலாம்.

பிரகலாதன் எடுத்துரைத்த இந்த ஒன்பது விதமான பக்திகளில் ஏதாவது ஒன்றை நாம் முறையாக பின்பற்றினால், இறைவனின் திருவடியை நிச்சயம் அடையலாம்.