கொரோனா பரவலை தடுக்க மக்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் சற்று வேகமாக பரவி வருவதாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரக்கோணத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் லதா கூறுகையில், 'அரக்கோணம் நகர் முழுவதும் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறி யாருக்கேனும் உள்ளதா? என சுகாதாரத்துறையினர் கண்டறிந்து வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் இதுபோன்று அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பொதுமக்கள் கடைப்பிடித்து நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

என் குப்பை என் பொறுப்பு என்கின்ற வகையில் மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை தோறும் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும். இதைத்தவிர்த்து, வழக்கமான துப்புரவு பணிகளும் நாள்தோறும் நடை பெறும் என கூறினார்.