சோளிங்கர் அடுத்த ஆயிலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காமாட்சி. இவர் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பிஏ தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதற்கிடையில் அவர் குமணன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கோபி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து மாணவி காமாட்சி கல்லூரிக்கு சரி வர வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தேர்வு எழுதும் தகுதியை இழந்து விட்டதாக தெரிகிறது. இத்நிலையில் மாணவி காமாட்சி தனது தந்தையுடன் நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் வந்தார். தேர்வு எழுத அனுமதி கேட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு கொடுத்துள்ளார். 

இதைத்தொடர்ந்து மாணவி காமாட்சி தனது 6 மாத கைக்குழந்தையுடன் கல்லூரி வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பூங்குழலியிடம் கேட்டதற்கு, மாணவி காமாட்சி பத்து நாள் கூட கல்லூரிக்கு வராததால் வருகைப் பதி வேட்டில் பதிவாக வில்லை. மூன்று மாதம் மெடிக்கல் லீவ் கேட்ட அவர், இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகத்துக்கு விண்ணப் பிக்கவில்லை என்றார்.