அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில்...!!

அமைவிடம் :

திண்டுக்கல் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் தாலுகா அலுவலக மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சீனிவாசப்பெருமாள் திருக்கோயில். பக்தர்களின் வேண்டுதலை ஏற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமணக் கோலத்தில் சீனிவாசராக, மலை அடிவாரத்தில் நெல்லி மரத்தடியில் காட்சி கொடுத்த பெருமை உடையது இத்தலமாகும். இத்தலம் பத்மாசலம் என்றும் அழைக்கப்படுகிறது.

மாவட்டம் :

அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், மலைக்கோட்டை அடிவாரம், திண்டுக்கல் மாவட்டம்.

எப்படி செல்வது?

திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் யானைத்தெப்பம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலுக்குச் சென்று விடலாம்.

கோயில் சிறப்பு :

மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் நெல்லி மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இதை துளசிக்கும் ஒப்பானதாகச் சொல்வர். மகாலட்சுமி இருக்குமிடத்தில், மகாவிஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலத்தை மகாவிஷ்ணுவின் இருப்பிடமாகக் கருதுகின்றனர். 

இக்கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரது சிலையில் சுற்றிலும் பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்புறம் நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கும் நரசிம்மருக்குக் கீழே நாகம் இருக்கிறது. 

இந்த நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பில் சக்கரத்தாழ்வார், நரசிம்மரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.

உற்சவர் கல்யாண சீனிவாசன் என்ற பெயரோடு உள்ளதால் இத்தலத்தைத் திருமணங்கள் நடைபெறும் தலமாக மக்கள் கருதி வழிபட்டு வருகின்றனர். 

திருமணத்தடை நீங்குவதற்காக கல்யாண சீனிவாசனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்ற பெருமையினை இக்கோயில் பெற்றுள்ளது. 

சுவாமி, வலது கையை ஆகாயம் நோக்கிக் காட்டியும், இடது கையை பூமியைக் காட்டியபடியும் இருக்கிறார். கோயில் முகப்பில் பெரிய கருடாழ்வார் நின்ற நிலையில் இருக்கிறார்.

கோயில் திருவிழா : 

சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், பங்குனி உத்திரம், வைகாசி, பவித்ரோற்சவம் ஆகிய நாட்களில் திருக்கல்யாணம் நடத்தப்பெறுகிறது. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் முக்கியமான நாட்களாக அமைந்துள்ளன. புரட்டாசி மாதத்தில் கல்யாண சீனிவாசரிடம் பக்தர்கள் தம்முடைய பிரார்த்தனைகளை முன்வைத்தால், அவை பலிக்கும் என்று நம்புகின்றனர். புதன், சனிக்கிழமைகள், அமாவாசை, பௌர்ணமி ஆகியவை இக்கோயிலின் சிறப்பு நாட்களாகும். 

பிரார்த்தனை : 

குழந்தைகள் மறதித்தன்மை நீங்கி, சுறுசுறுப்பாக இருக்கவும், கல்வியில் சிறக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடை நீங்க கல்யாண சீனிவாசருக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கிறார்கள். மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன் : 

சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.