சிறுநீர் கல் கரைய வைத்தியமும் தடுக்கும் வழிமுறையும்:::

சிறுகண்பீளைச் சமூலத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து விதிப்படி குடிநீர் செய்து 30 மி.லி தினம் இருவேளை குடித்து வர சிறுநீரில் குருதி வருதல், சிறுநீரகக் கற்கள் வெள்ளை ஆகியன குணமாகும்.

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது. இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது. அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன. நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன. சுவையும் அதிகம். போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது. உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது.

நாம் ஏன் உணவு உண்கிறோம்?

நமது அன்றாட வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே நமக்கு உணவு தேவைப்படுகிறது. நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை. அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும். ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது. தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பலநோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிறுகச் சிறுக கொல்லுகின்றன.

இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும்.

உணவின் அளவு

ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான். இதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம், "அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள்" என்று சொன்னார்.

வெற்றுக் கலோரி வேண்டாம்

இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஷாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.

எவை ஆரோக்கியமானவை?

உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.

ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும். கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உட்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும். இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற்கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.

புதிய ஆய்வு

ஆனால் இப்பொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும். Brigham and Women’s Hospital லில் உள்ள Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும்.

சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.

நமது சூழலில் அதிகம்

எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே.. நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். நமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.

வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பார தூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.

சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.