அணைக்கட்டு அருகே கிராம மக்கள் சார்பில் குறி வைத்து கேட்கப்பட்டு, 9 வயது சிறுவனுக்கு நாட்டாண்மையாக தலைமை பட்டம் சூட்டப்பட்டுள்ளது. 

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 36 மலை கிராமங்களுக்கு ஒருவர் நாட்டாண்மையாக நியமிக்கப்பட்டுள்ள இந்த சிறுவன் தான் மலையில் நடக்கும் பொது பிரச்சனை, குடும்ப தகராறு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்ப்பு சொல்லவேண்டும். 

மேலும் மலை நாட்டில் ஊரான்கள் இறந்தால் புது ஊரான் தேர்வு செய்து பட்டம் வழங்குவது உள்ளிட்டவைகளை செய்யவேண்டும். பழைய நாட்டாமை இறந்துவிட்டதால் மலைக்கிராம மக்களின் ஐதீகப்படி அவருடைய வாரிசான யாருக்கு தலைமை நாட்டாண்மை பட்டம் கொடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் சார்பில் குறி வைத்து கேட்கப்பட்டது. அதில், சின்னான்டியின் மகன்கள் யாருக்கும் தலைமை பட்டம் வழங்க அனுமதி கிடைக்கவில்லையாம். 

ஆனால் அவரது 9 வயது பேரன் சக்திவேலுவுக்கு வழங்க அனுமதி கிடைத்ததாம். இதனால் மலைக்கிராம மக்களின் வழக்கப்படி சின்னான்டியின் பேரன் 9 வயது சிறுவனுக்கே தலைமை நாட்டாண்மை பட்டம் சூட்ட முடிவு செய்தனர்.

 36 கிராம மக்கள் முன்னிலையில் அந்த சிறுவனுக்கு தலைமை நாட்டாண்மை பட்டத்தை வழங்கி, செங்கோல் கொடுத்து கவுரவப்படுத்தினர். பின்னர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.