வேலூர்: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது. அதன்படி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் குட்கா கடத்தப்படுவதாக வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்றிரவு 9 மணியளவில் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக காரில் வந்த 3 நபர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராஜ்குருவி(25), விழுப்புரத்தை சேர்ந்த குமார்(40), தூத்துக்குடியை சேர்ந்த கோபால்(30) என்பதும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் குட்காவை கடத்தி வந்ததும் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே போலீசார் கண்காணிப்பதை அறிந்த அவர்கள், கன்டெய்னர் லாரியை டோல்கேட்டிற்கு முன்பாகவே நிறுத்திவிட்டு, காரில் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கன்டெய்னர் லாரியை சோதனையிட்டனர். அதில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை இருப்பது தெரியவந்தது. குட்காவுடன் கன்டெய்னர் லாரி மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்குருவி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.