ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழாவையொட்டி நேற்று சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பாலமுருகன்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு சுவாமி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இதில் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். கிருத்திகை முன்னிட்டு வெள்ளி வேல் மற்றும் சேவற்க்கொடியுடன் சுவாமி பாலமுருகன் அருள்பாலித்தார்.
வழக்கமாக ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று பக்தர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது.