வேலூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் அதிகாரிகள் வேளாண் பணிகளுக்கும் ஆட்களை அனுப்ப வேண்டுமெனவும்,  வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கக்கோரியும் பத்து மாதங்களுக்குப் பின்னர் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோன காரணமாகக் கடந்த 10 மாதங்களாக நடைபெறாத விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, கேவிகுப்பம், குடியாத்தம், காட்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது, ஏரிகளும் குளங்களும் பெரும்பாலும் தூர்வாரப்பட்டதால் அவைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. பெரும்பாலான ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளதால் மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள்  நன்றி தெரிவித்தனர்.

மேலும் அரசு அறிவித்தும் வேளாண் பணிகளுக்கு நூறு நாள் பணியாளர்களை அதிகாரிகள் அனுப்புவதில்லையெனக் குற்றம்சாட்டி விவசாயிகள் பேசினர். வனவிலங்குகளான காட்டுப்பன்றி, யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க குழிகளை வெட்டியும் தடுப்புகளை அமைத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரினர்.  


இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் பல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.