காவேரிப்பாக்கம் அருகே தங்கச்செயினை பறித்து ஓடிய மர்ம நபர்கள்
காவேரிப்பாக்கம் அருகே உள்ள சேரி அய்யம்பேட்டையில் நேற்று காலை வேலைக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த ரகுவரனை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்றனர்.

ரகுவரன் சேரி அய்யம்பேட்டை ஒத்தவாடை தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு கவிப்பிரியன் (4) என்ற மகனும், ஹேம தர்ஷினி (1) என்ற மகளும் உள்ளனர்.

ரகுவரன் ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வேலைக்கு செல்ல சேரி அய்யம்பேட்டை கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் விடியற்காலை 3.30 மணிக்கு ரகுவரன் கம்பெனி பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் ரகுவரனிடம் அவசரமாக நண்பருக்கு போன் செய்ய வேண்டும், செல்போனை கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு ரகுவரன் வேலைக்கு செல்லும் பஸ் வரும் நேரம் என்று கூறி செல்போனை கொடுக்க மறுத்துள்ளார்.

இதையடுத்து மர்ம நபர்கள் இருவரும் ரகுவரனை சரமாரியாக தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.

இதில் ரகுவரனுக்கு தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதேபோல் ராஜபாளையம் அருகே டீ குடிக்க வந்த மாதவன் என்பவரின் செல்போனையும் பறித்துவிட்டு தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சரவணனிடத்தில் ரகுவரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், "மர்ம நபர்களை கைது செய்ய முயற்சி செய்து வருகிறோம். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் மர்ம நபர்களை கைது செய்வோம்" என்றார்.