வேலூர்: லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வரும் வசந்தி (50) என்பவர், ஆந்திராவில் இருந்து வரும் வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

டியூட்டி முடிந்து வசந்தி வீட்டுக்கு காரில் கிளம்பினார். உடனே போலீசாரும், வசந்தியை பின் தொடர்ந்து சென்றனர். சுமார் 25 கி.மீட்டர் தூரம் சென்றபோது, அதாவது ராணிப்பேட்டை பாரதி நகர் அருகே வசந்தியின் காரை போலீசார் சுற்றிவளைத்து மடக்கினார்கள்.

காரில் அதிரடியாக சோதனையிட்டபோது, ரூ.3 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்துக்கு போலீசார் கணக்கு கேட்டார்கள். ஆனால், வசந்தியால் கணக்கு காட்ட முடியவில்லை. இதையடுத்து, கணக்கில் வராத அந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

பிறகு, ராணிப்பேட்டையில் பாரதி நகரில் உள்ள வசந்தியின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டிற்குள் ரூ.3.25 லட்சம் கைப்பற்றப்பட்டது.

மொத்தம் ரூ.6.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எந்த வகையில் வந்தது என்பதை மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி விசாரணையின்போது நிரூபிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வசந்தி லஞ்சம் வாங்கியதற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.