ஸ்ரீபெரும்புதூர் அருகே, சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். 

இதில், அச்சிறுமி வாலாஜாபாத் அடுத்த திம்மராஜாம்பேட்டை பகுதியை சேர்ந்த கவிமணி (23), என்கிற இளைஞருடன் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில் இளைஞரின் நண்பன் வீட்டில் கவிமணி மற்றும் சிறுமி இருவரும் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியையும், கவிமணியையும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், கவிமணி சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, கவிமணி மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.