ராணிப்பேட்டை: கத்தாரிகுப்பத்தில், 20 பேர் மட்டும் ஓட்டு போட்டதால், அங்கு, மறு ஓட்டுப்பதிவு நடந்த, அ.தி.மு.க., வேட்பாளர் ராமு தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் துரை முருகன், அ.தி.மு.க., வேட்பாளர் ராமு உள்ளிட்ட, 15 பேர் போட்டியிட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தை சேர்ந்த கத்தாரிகுப்பம் கிராமம், காட்பாடி தொகுதியில் வருகிறது. அங்கு, 998 ஓட்டுகள் உள்ளன. கடந்த, 6ல் நடந்த ஓட்டுப்பதிவின்போது, அப்பகுதியினர், 20 ?பேர் மட்டுமே ஓட்டளித்தனர். அதிகாரிகள் விசாரணையில், அக்ரஹாரத்தை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலாளர் முருகன், 55, கத்தாரிகுப்பத்தில் பழைய டயரை எரித்து, தார் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார்.
அதில், ஏற்படும் கடும் மாசுவால், அதை மூடக்கோரி, மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தது தெரிந்தது. இது குறித்து, காட்பாடி, அ.தி.மு.க., வேட்பாளர் ராமு, காட்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி புண்ணிய கோட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: காட்பாடி, சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கத்தாரி குப்பத்தில், ஓட்டுச்சாவடி எண், 239ல் சிலருடைய தூண்டுதலால், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக ஓட்டு போடுவதை தடுக்க, மக்களை திசை திருப்பி, தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஓட்டு எண்ணிக்கை நடக்கும், மே, 2க்கு முன்பாக, இங்கு மறு ஓட்டுப்பதிவு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.