காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன் (35) என்பவர் மக்கள் தேசம் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் மாவட்ட நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியில் கட்ட பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, இவர் மீது சுமார் 22 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பிரபல ரவுடியாக உள்ள விவேகானந்தன், அவரது நண்பருடன் நேற்று (ஜன.31) இரவு வாலாஜாபேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் சுமைதாங்கி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரை காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், சுமைதாங்கி ஏரிக்கரை அருகே வந்த போது, விவேகானந்தன் சென்ற இரு சக்கர வாகனத்தின் பின்னால் காரை வைத்து மோதி உள்ளனர்.

இதனால் விவேகானந்தனும், அவரது நண்பரும் நிலை தடுமாறி கீழே விழுந்த போது, காரிலிருந்து இறங்கிய மர்ம கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் விவேகானந்தனை சரமாரியாக வெட்டியுள்ளது. இந்த தாக்குதலில் உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விவேகானந்தன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார், உயிரிழந்த விவேகானந்தனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தாக்குதலில் லேசாக காயமடைந்த விவேகானந்தனின் நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி முன்விரோதம் காரணமாக இளவரசன் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், விவேகானந்தன் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த முன்விரோதம் காரணமாக விவேகானந்தன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கார் வாங்கி விற்பனை செய்யும் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் உதவி கண்காணிப்பாளர் யாதவ் க்ரிஷ் அசோக் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வைத்து பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.