ராணிப்பேட்டை: மர்ம நபர்கள் செயின் பறிக்க முயன்றதில் தம்பதிக்கு காயம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த தனஞ்செழியன் (48) மற்றும் அவரது மனைவி ரூபாவதி (36) நேற்று முன்தினம் இரவு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பின்னால் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் ரூபாவதி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர். ரூபாவதி செயினை இறுக பிடித்ததால் அவரது கை அறுப்பட்டது. தனஞ்செழியன் மர்ம நபர்களை பிடிக்க முயன்றபோது அவரது கையையும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

தம்பதியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, பைக்கில் வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.