ஆற்காடு நேரு தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டியன். சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 26-ந் தேதி மாலை வீட்டை பூட்டிக் கொண்டு தனது மனைவியுடன் காஞ்சீபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

மறுநாள் (27-ந் தேதி) மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலேயே விட்டு சென்ற சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து செல்லபாண்டியன் ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் செல்லபாண்டியன் வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், செல்லபாண்டியனின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களை விசாரணை செய்து வருகின்றனர்.