ராணிப்பேட்டையில் வேன் டிரைவரை மிரட்டி கொள்ளை
ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (45). இவர் வேன் டிரைவர். நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டையில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, பாணாவரத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் மகேந்திரன் (35) என்பவர் அங்கு வந்தார். அவர் கோபிநாத்தின் கழுத்தில் இருந்த நான்கு சவரன் செயினை கத்தியை காட்டி மிரட்டி பறித்துக் கொண்டார். மேலும், கோபிநாத்தின் பையில் இருந்த ரூ.17 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து கோபிநாத் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேந்திரன்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செயின் மற்றும் பணம் கோபிநாத்துக்கு வழங்கப்பட்டது.

மகேந்திரன் மீது ஏற்கனவே 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.