அரக்கோணம் அடுத்த சித்தேரி, வேடல், மேலேரி உள்ளிட்ட பகுதிகளில் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் திடீரென காணாமல் போவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த சூர்யா (21), முரளி (21) என்ற இரு வாலிபர்கள் ஆடுகளை திருடியது தெரியவந்தது.

நேற்று தாலுகா சப் இன்ஸ்பெக்டர் நாராயண சாமி தலைமையில் போலீசார் மிட்டப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற இரு வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் தான் அந்த பகுதியில் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 10 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.