ராணிப்பேட்டையை அடுத்த, கெல்லீஸ் ரோடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், தனது முதல் மனைவி சந்தானலட்சுமியை அடிக்கடி மது அருந்திவிட்டு துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால், சந்தானலட்சுமி தனது தாய் வீட்டில் தங்கி குழந்தைகளை பராமரித்து வந்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்த சதீஷ்குமார், மனைவியை சமாதானப்படுத்தி, இனி ஒழுங்காக இருந்து குடும்பம் நடத்துவதாக கூறியுள்ளார். இதை நம்பி குடும்பத்தினர் அவரை சேர்த்துக்கொண்டனர்.
ஆனால், சதீஷ்குமார் மீண்டும் தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்தார். கடந்த 05.10.2023 அன்று சந்தானலட்சுமியிடம் தகராறு செய்து அவரை அடித்துள்ளார்.
இந்நிலையில், சதீஷ்குமார் தனது முதல் மனைவி சந்தானலட்சுமியை பிரிந்து சென்றபோது சித்தூரை சேர்ந்த அமுலு என்பவரை முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததும், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தானலட்சுமி, ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
சதீஷ்குமார் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.