ராணிப்பேட்டையில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை - ரூ.1.45 லட்சம் பணம் பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று இரவு 9 மணி அளவில் விஜிலென்ஸ் டிஎஸ்பி கணேசன், மாவட்ட ஆய்வுக் குழு தலைவர் சரவண முத்து மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, உதவி செயற்பொறியாளர் அரிகிருஷ்ணன் (50) அலுவலகத்தில் இல்லை. அவரது அறையில் உள்ள பீரோவை சோதனை செய்தபோது ரூ.77 ஆயிரம் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இளநிலை வரைவாளர் உமா என்பவரிடம் இருந்து 20 ஆயிரம், அங்கிருந்த 3 கான்ட்ராக்டர்களிடம் ரூ.47 ஆயிரம் என மொத்தம் ரூ.1.45 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பிடிஓ அலுவலக வளாகத்தின் பின்புறம் யாராவது பணத்தை வீசி விட்டுள்ளார்களா என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் டார்ச் லைட் அடித்து தேடி வருகின்றனர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணியை கடந்தும் நீடித்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி செயற்பொறியாளர் அரிகிருஷ்ணன், இளநிலை வரைவாளர் உமா மற்றும் கான்ட்ராக்டர்கள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vigilance raid in Ranipet! The midnight raid was a huge sensation