ராணிப்பேட்டையில் உள்ள பெல் டவுன்ஷிப்பில் நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள், 9 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. சி பிளாக்கில் உள்ள 166, 202, 212, மற்றும் 1021, 1025, 1032,1059,1044 மற்றும் 1045 ஆகிய எண் கொண்ட வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளை நடந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்ததால், அவர்கள் வந்த பிறகுதான், எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்பது தெரிய வரும்.
இதுகுறித்து கொள்ளை நடந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் கூறுகையில், நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் வடமாநிலத்தை சேர்ந்த இந்தி பேசும் ஒரு பெண்ணும், அவருடன் ஒரு சிறுமியும் அப்பகுதியில் சுற்றி வந்ததாகவும், முதல் தளத்தில் உள்ள 212ம் எண் குடியிருப்புக்கு சென்று வந்ததாகவும் கூறினர்.
அன்று இரவு 8 மணியளவில் அதே பகுதியில் சம்பந்தமில்லாத சிலர்நின்றுகொண்டு குடியிருப்புகளை பார்த்துக்கொண்டிருந்ததாகவும், சிறிது நேரத்தில் அவர்கள் மாயமானதாகவும் கூறினர்.
பூட்டியிருந்த வீடுகளின் தாழ்ப்பாள்களை மட்டும் உடைத்து கொள்ளையர் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இதேபாணியில், 2018ம் ஆண்டு மூன்று முறை பெல் டவுன்ஷிப்பில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பவுன் நகைகள் திருடுபோனது. அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்கள் என்று தெரிந்தது. ஆனால் இதுவரை அவர்கள் பிடிபடவில்லை.
இப்போது நடந்த கொள்ளையும் இதே பாணியில் நடந்துள்ளது. எனவே, இதுபோன்ற கொள்ளைகளை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.