வாலாஜா அருகே உள்ள முசிறி காலனியை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் அம்மூரில் உள்ள ஓட்டலில் சர்வராக வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் பஸ்சில் அருகே உள்ள ஈச்சன் தாங்கல் கிராமத்தை சேர்ந்த சஞ்சனா (27) என்பவரும் வேலைக்கு சென்று வருகிறார்.


தினம்தோறும் ஒரே பஸ்சில் வேலைக்கு செல்லும் ரமேஷ், சஞ்சனாவும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனை சஞ்சனாவின் அண்ணன் சந்தோஷ் தவறாக புரிந்து கொண்டு அடிக்கடி ரமேஷிடம் வாய் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முசிறி காலனியில் உள்ள ரமேஷின் வீட்டிற்கு சந்தோஷ் மற்றும் அவர் நண்பர்கள் சரவணன், கதிர் ஆகியோருடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக ரமேஷை அடித்து உதைத்தனர். மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷ் ரமேஷை தலையில் வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த ரமேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை தாக்கிய வழக்கில் தலைமறைவான சந்தோஷ், சரவணன், கதிர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.