ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள சுமார் 14 மேல்நிலைப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு பயின்று வரும் 2540 மாணவ மாணவியருக்கு ரூபாய் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் காந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழுத்தலைவர் சேஷாவெங்கட், முதன்மை கல்வி அலுவலர் உஷா, ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி மற்றும் அரசு அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி, "மாணவர்கள் கல்வி பயிலுவதில் எந்த தடையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு எளிதில் செல்ல முடியும். 

இந்த திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 2540 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.