ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.65.49 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டடம் மற்றும் பூண்டி ஊராட்சியில் ரூ.42.65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கிராம செயலக கட்டடத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.கதிரேசன், ஊராட்சி ஒன்றிய செயலர் பி.சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர் வி.செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஜெயராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:

"மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகள் மூலம் மாணவர்கள் சிறந்த முறையில் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் பூண்டி ஊராட்சியில் புதிய கிராம செயலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் மூலம் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இடையே சிறந்த தொடர்பு ஏற்படும்.

அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது" என்றார்.