ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பனப்பாக்கத்தில் நேற்று இரவு 10 மணியளவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பனப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு, பிரசாந்த் ஆகியோருக்கும் கல்பலாம்பட்டு காலனியைச் சேர்ந்த சிலருக்குமிடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பனப்பாக்கத்தில் இருதரப்புக்கும் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. பின் கோஷ்டி மோதலாக மாறியது.

இந்த மோதலில் இருதரப்புக்கும் இடையே கம்பு, கல் ஆகியவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இருதரப்பில் சிலர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு நெமிலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.