வேலூரில் இருசக்கர வாகனம் - பேருந்து மோதல்: 19 வயது பெண் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் இன்று வேலூரில் இருந்து பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அரப்பாக்கம் நோக்கி தனது இரண்டு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேலூர் அடுத்த பெருமுகை பகுதியில் பாலம் கட்டுமான பணி நடந்துவருகிறது. அப்பகுதியைக் கடக்கும் போது பின்னால் வந்த தனியார் பேருந்து லேசாக வெங்கடேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.


இதில் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்ததில் வெங்கடேசனின் இரண்டாவது மகள் சுவேதா (19) மீது தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெங்கடேசன் மற்றும் அவரது மூத்த மகள் லீலாவதி (23) ஆகியோர் பலத்த காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.