ஆற்காடு கோட்டைமேடு தெருவை சேர்ந்த ரவி (வயது 60) என்பவர், ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு தனியார் திருமண தகவல் மையம் அலுவலகம் முன்பு இரவு நேரங்களில் படுத்து உறங்குவது வழக்கம்.

நேற்று இரவு ரவி தகவல் மையம் அலுவலகம் முன்பு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜித்குமார் (27), நாகராஜ் (22) ஆகிய இரு வாலிபர்கள் ரவியிடம் தகராறு செய்து கல்லால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த ரவியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அஜித்குமார் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் ரவியை தகராறு செய்து கல்லால் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.