ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த அகரம் சாலை பகுதியில் விஜயராகவன் என்பவர் வீடு உள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் வீட்டுக்குள் சென்று பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து விஜயராகவன் கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீட்டின் வெளியில் உள்ள கேட்டை உடைத்து மர்ம நபர் உள்ளே நுழைந்தது தெரியவந்தது. பின்னர், ஜன்னலை திறந்து அதன் வழியாக சிலாப்பில் இருந்த பெட்டியை இழுத்து அதில் இருந்த வீட்டு பத்திரங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கலைத்து பணம் உள்ளதா என தேடினார். இருப்பினும், வீட்டில் பணம் இல்லை என்பதால், அவர் தப்பி ஓடிவிட்டார்.
அருகில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், கைபையை மாட்டி கொண்டு மர்மநபர் வருவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மர்ம நபர் காலையில் தயிர் பாக்கெட் கையில் வைத்துக் கொண்டு வீடு வீடாக விற்பனை செய்து வருவதாக கூறினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மர்ம நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கலவை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்