ராணிப்பேட்டை நகரில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர் ஹாரன்கள்) பொருத்திய பேருந்துகளுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம் நடவடிக்கை மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம் தலைமையில், வட்டார போக்குவரத்து ஆய்வாளா் சிவகுமார் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளதா என புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சோதனையிட்டனர். இதில் 4 பேருந்துகளுக்கு தலா ரூ. 10,000 வீதம் ரூ. 40,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 13 பேருந்துகளில் விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான் குழாய்கள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்களிடம் மீண்டும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருந்தால் ஓட்டுநர் உரிமம் 3 மாதம் நிறுத்தி வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த பொக்லைன் இயந்திரத்தை சோதனையிட்டதில், ஒரு ஆண்டு வரி செலுத்தாதது தெரியவந்ததையடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.