ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்த பைனான்சியர் சரவணன், நேற்று இரவு ரூ.15 லட்சம் பணத்துடன் காரில் சித்தூரில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்தார். அப்போது, கத்தாரிகுப்பம் கிராமம் அருகே மர்ம நபர்கள் 4 பேர் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர். முந்தி சென்று சரவணனின் காரை மடக்கினர். காரில் முன்பக்க கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி சரவணனிடம் ரூ.15 லட்சம் பறித்தனர்.
இதை தடுக்க முயன்ற சரவணன், டிரைவர் சுந்தர் ஆகியோரை மர்ம நபர்கள் தாக்கினர். இதில் சரவணனுக்கு வலது கையிலும், சுந்தருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இவர்கள் கூச்சலிட்டனர். மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து தாங்கள் வந்த பதிவு எண் அகற்றப்பட்ட காரில் தப்பி சென்றனர். கும்பல் சென்ற கார் கத்தாரிகுப்பம் கிராமத்தின் அருகே வயல்வெளியில் சேற்றில் சிக்கியது. அந்த காரை அப்படியே விட்டு விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
காரிலிருந்து தப்பி ஓடிய கும்பல் வனப்பகுதி வழியாக தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழிப்பறி தொடர்பாக ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பதிவு எண் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.