ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் முப்பது வெட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வராகி அம்மன் கோவில் அருகே உள்ள ஏரி கால்வாய் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது. இதில் 80 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்திலிருந்து தேனீக்கள் கலைந்து வேலை செய்துகொண்டிருந்த சுமார் 30 பேரை கொட்டியுள்ளது.

உடனடியாக அவர்களை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 5 பேர் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.

பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.