சோளிங்கர் வட்டம், தலங்கை ரயில் நிலையம் அடுத்துள்ள கீழ்கரடிகுப்பம் கிராமம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்த தனலட்சுமி (75) என்பவர், வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார். செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 17) மதியம் 2. 30 மணிக்கு இறந்தார்.
தனலட்சுமியின் மரணம் அவரது மகன் குமாரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாயின் சடலத்தை கட்டிப்பிடித்த படி அழுதுகொண்டிருந்த அவருக்கு மாலை 7 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உறவினர்கள் அவரை வாலாஜாப்பேட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினர்.
தனலட்சுமியின் மரணத்தால் அவரது மகன் குமார் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனலட்சுமியின் பேரனும், குமாரின் மகனுமான கிருஷ்ணகாந்த் (21), சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு பாலாற்று பாலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தார். இவ்விரண்டு இறப்புகளும் கீழ்கரடிகுப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.