ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போன் செய்தால் வாடிக்கையாளரின் இடத்திற்கே சென்று போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நபரை ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் குடிமல்லூர் மேம்பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர், அப்போது வாகனத்தில் 2 கிலோ அளவிலான போதைபொருள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (37) வாடிக்கையாளர்கள் போன் செய்தால் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, ராஜேஷின் வசம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும், விற்பனைக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், அந்த நபரின் இல்லத்தில் மறைத்து வைத்திருந்த 3 கிலோ போதைப் பொருளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.