மகனைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
அரக்கோணம் தாலுகா, தக்கோலம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முனியப்பன்(40). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தனது மகன் திண்ணப்பன்(15) என்பவரை கிணற்றில் தள்ளி கொன்றார். இந்த வழக்கில் முனியப்பன் மீது தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முனியப்பன் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து, மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, முனியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், முனியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில், மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.