ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 55) கால்வாயில் இறந்து கிடந்தார்.
கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் இரவு சாப்பிட சென்றார். பின்னர் அவர் வேலைக்கு வரவில்லை. அவரைத் தேடி பார்த்தனர். அவரை காணாததால் அவரது வீட்டுக்கு தகவல் கொடுத்தனர். அவரும் வீட்டிற்கு வரவில்லை.

நேற்று காலை மறுபடியும் அவரை தேடிய போது கம்பெனியில் புதர்கள் நிறைந்த கால்வாயில் இறந்து கிடந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

கிருஷ்ணமூர்த்தியின் மரணம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.