ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கூட்ரோடு பகுதியில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது, வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென தப்பிய ஓடினார். ஆனால், வண்டியை ஓட்டி வந்த நபர் போலீஸில் பிடிபட்டார்.
பிடிபட்ட நபரின் பெயர் தமிழ் செல்வன். இவர் விழுப்புரம் மாவட்டம் இளவரசனார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆற்காட்டில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். தப்பியோடிய நபரின் பெயர் ஆன்ந்த என்கிற உளி. இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கடைசியாக ஆற்காடு அடுத்த புது மாங்காடு பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 46 சவரன் தங்க நகை கொள்ளைடித்ததும் தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்து, அந்த பணத்தில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து, தமிழ் செல்வன் வசித்து வந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அவர் பயன்படுத்தி வந்த சோனி எல்.இ.டி டிவி, வாஷிங் மெஷின் மற்றும் 3 சவரன் தங்க நகை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து தமிழ்ச்செல்வனை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளி ஆனந்தை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆற்காடு துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறியதாவது: "தமிழ் செல்வன் மற்றும் ஆன்ந்த இருவரும் பழைய உறவு. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இவர்கள் சேர்ந்து கொள்ளையடித்து வந்தனர். கடைசியாக புது மாங்காடு பகுதியில் கொள்ளை அடித்துள்ளனர். தப்பியோடிய ஆனந்தை தேடி வருகிறோம். கைது செய்யப்பட்ட தமிழ் செல்வனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம்" என்றார்.