ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் புதிய பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

ஆற்காடு எம்.எல்.ஏ.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆற்காடு பழைய பஸ் நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணியும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்கும் என மொத்தமாக ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியும், கட்டிட, பணிகளை தரமாக மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியாளரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனலட்சுமி, நகரமன்றத் துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம், நகராட்சி பொறியாளர் எழிலரசன், நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.