ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், விநாயகர் சிலை நிறுவுவதற்கான விதிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்தார். விநாயகர் சிலை நிறுவுவதற்கு வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்ட இடம் தனியார் இடமாக இருப்பின் நில உரிமையாளரின் இசைவுக்கடிதமும், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையின் ஆட்சேபணையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொட்டகைக்கு உட்பகுதியில் வைக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள சிலைகள் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகாமையில் சிலைகள் அமைக்கக் கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்விழா தொடர்பாக கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் அவற்றின் ஒலி அளவும் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே இருத்தல் வேண்டும். விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் மின்சாரத்தினை பயன்படுத்துவதை தவிர்க்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். விழாக்குழுவினர் சார்பாக இரு தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மற்ற மதத்தினர்களின் வழிபாட்டினை, நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்ப கூடாது.

சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலங்கள் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று கரைக்கப்பட வேண்டும்.

இந்தக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கலெக்டர் வளர்மதி உறுதியளித்தார்.