வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா எல்லையில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி தமிழக பாலாற்றில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.திம்மம்பேட்டை, ஆவாரமங்குப்பம், ராம்நாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆந்திரா எல்லை பகுதியான மாதகடப்பா, வீரனமலை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் காட்டாற்று வெள்ளம் உருவாகி திம்மாம்பேட்டை மன்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆவரங்குப்பம் வழியாக மழை நீர் பாலாற்றில் கலந்து வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக பாலாறு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வேலூர் மாவட்டம் செதுவாலை ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல் பாலாற்றின் கிளை ஆறுகளான குடியாத்தம் கவுன்டண்யா ஆற்றில் இருந்து மோர்தானா அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கும் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
ஆம்பூர் அருகே வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒடுகத்தூர் அருகே உள்ள உத்தர காவேரி ஆறு, கணியம்பாடி அருகே உள்ள நாகநதி ஆற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.