அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணத்தை அடுத்த சித்தேரி அருகே உள்ள மாந்தோப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்துச் சென்ற போலீசார் அச்சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் சித்தேரியைச் சேர்ந்த விக்னேஷ்(22) என்பதும் இவர் ஸ்ரீ பெரும்புதூர் அடுத்துள்ள இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

விக்னேஷின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. அவர் தலையில் பலமாக அடிபட்டதால் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை யார் கொலை செய்தது, முன் விரோதம் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

விக்னேஷின் உறவினர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் தொழிற்சாலையில் வேலை செய்தபோது ஏற்கனவே சிலர் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணையில் மேலும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.