ராணிப்பேட்டை நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை நகர மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சீ.ம.ரமேஷ்கா்ணா முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை நகராட்சி அம்மா உணவகத்தில் ஓராண்டுக்கு கட்டணமில்லாமல் பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்குவதற்கான தொகையை செலுத்தி வரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்திக்கு நன்றி தெரிவித்தல் என்பது உள்பட 50 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 30 சதவீத ஏழை, எளிய குடும்பத்தினா் தெருக்குழாய்களில் குடி தண்ணீா் எடுத்து வருகின்றனா். அவா்களும் பயன்பெறும் வகையில் குடிநீா் குழாய் இணைப்பு அளிக்க வேண்டும் என நகர மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
உறுப்பினா்களின் கோரிக்கைக்கு தலைவா் சுஜாதா வினோத் பதில் கூறியதாவது:
ராணிப்பேட்டை நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்கு , கழிவுநீா் கால்வாய் என்பது உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா்.
இதில் நகராட்சி ஆணையா் மற்றும் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராணிப்பேட்டை நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது. இது நகராட்சியில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் சுத்தமான குடிநீா் கிடைக்க வழிவகுக்கும். மேலும், இது நகராட்சியின் சுகாதார நிலையை மேம்படுத்தவும் உதவும்.