ராணிப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை அருகே குப்பைத்தொட்டியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள், அவரச சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐசியூ பிரிவில் உள்ள கழிவறையின் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருப்பதாக அங்குள்ள பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் குழந்தையை மீட்டு பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தகவல் அறிந்த வாலாஜா காவல்துறையினர் உயிரிழந்த ஆண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில்,"மருத்துவமனை வளாகத்தில் பிறந்த சில மணி நேரங்களே ஆகிய பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நேற்று கர்ப்பிணி தாய்மார்கள் 6 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைகள் அனைத்தும் நலமாக உள்ளதாக மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தகாத உறவின் காரணமாக பிறந்த குழந்தையை தொடர்புடைய நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வைத்து விட்டு சென்றார்களா? அல்லது வேறுயாராவது குழந்தையை கொண்டு வைத்துவிட்டு சென்றார்களா? மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகிறோம்" என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.