ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (31) - யுவஸ்ரீ (23) தம்பதிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் யுவஸ்ரீ தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார்.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் பழையபாளையத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கு மனைவியை தன்னுடன் அழைத்துச் செல்லுமாறு கேட்டார்.

இதையடுத்து இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணிகண்டனின் தந்தை சுந்தரம் (55) யுவஸ்ரீயின் பெரியப்பா அண்ணாதுரை (55) மீது கத்தியால் குத்தினார். இதில் அண்ணாதுரை படுகாயமடைந்தார். மேலும் சுந்தரமும் தாக்கப்பட்டார்.

இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.