ஆற்காடு அருகே குடும்ப தகராறில் மன வேதனையில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாழனூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான ஆறுமுகம் கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துக் கொண்டிருந்தாராம்.

இதை அவரது குடும்பத்தினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் மன வேதனையில் இருந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது பேனில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். வெளியில் சென்றிருந்த குடும்பத்தினரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஆறுமுகம் சடலமாக கிடைப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஆறுமுகத்தின் தாயார் இன்பவள்ளி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.