சோளிங்கர் ரயில் நிலைய நடைமேடையில் காயங்களுடன் இறந்த நிலையில் ரவுடியின் உடல் கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ரயில் நிலைய நடைமேடை அருகே ரயில் தண்டவாளத்தில் தலை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக காட்பாடி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காட்பாடி ரயில்வே காவல்துறையினா் சம்பவ இடத்தில் கிடந்த கைபேசி மூலம் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் நீதிபதி உத்தரவிட்டார் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த நபா் பாணாவரம் நெமிலி சாலை பகுதியை சோ்ந்த ராஜேஷ்(31) என்கிற வண்டு என்பதும், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காட்பாடி ரயில்வே காவல்துறையினா் பிரேத பரிசோதனைக்காக உடலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனையை துரிதப்படுத்தியுள்ளனா். சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ்வரய்யா, அரக்கோணம் ஏஎஸ்பி யாதவ்கிரீஸ் அசோக், ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

ராஜேஷ் பழைய குற்ற வழக்கு சம்மந்தமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில் ரயில் நிலைய நடைமேடை அருகே உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது போலீஸாருக்கு பல்வேறு வகையில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் தலை மற்றும் கைகளில் மட்டுமே காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதால் முன்விராத காரணமாக நடந்த கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் அல்லது தற்கொலையாகவோ, விபத்தாகவோ இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.