வாலாஜாவில் பாலாறு அணைக்கட்டு செல்லும் சாலையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த குமார் (48) என்பவர் பல வருடங்களாக நெல்லை சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அவர் அந்த கடையின் மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடை கல்லாப் பெட்டியில் வைத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தையும், மளிகை பொருட்கள் சிலவற்றையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து குமார் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கேமரா பதிவுகளில் 2 நபர்கள் கல்லாப்பெட்டிகளில் இருந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மளிகை கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.