ராணிப்பேட்டையில் தனியார் பள்ளியில் பெற்றோர்கள் போராட்டம்
ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் நிர்வாகம் மாறினால் தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியின் நிறுவனருக்கு கடன் உதவி செய்த தனி நபர்கள் சிலர் தற்போது பள்ளி நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளியின் நிர்வாகத்தை நிறுவனரே தொடர வேண்டும். இல்லையெனில் தங்களின் பிள்ளைகளை பள்ளியை விட்டு விடுவித்து கொள்வோம் எனக்கூறி நேற்று பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் பள்ளி நிறுவனரிடமும், பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.