ராணிப்பேட்டை,காரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவில் ராணிப்பேட்டை பஜாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தனது நண்பர்களிடம் பைனான்ஸ் வசூல் செய்வதற்காக வந்து வசூல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளா என்கிற இளம்பரிதி (32), ஆர்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்த லொட்டா என்கிற சண்முக பிரியன் (26) ஆகிய இருவரும் ஏற்கனவே சினிமா தியேட்டரில் படம் பார்த்தபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜீவ் காந்தியை வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்.

கையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் ரூ.7ஆயிரத்து 500 மற்றும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ராஜீவ் காந்தி ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதி, சண்முக பிரியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.